search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினர்வா தியேட்டர்"

    தற்போது புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டிருக்கும் மினர்வா தியேட்டரில் விஸ்வாசம் படத்திற்கு ரசிகர்கள் குவிந்துள்ளனர். #Viswasam #Batcha
    சென்னையில் பழமையான தியேட்டர்களில் ஒன்று மினர்வா. பிராட்வேயில் டேவிட்சன் தெருவில் சிறிய குடியிருப்புகள், குடோன்களுக்கு இடையே மினர்வா தியேட்டர் இயங்கி வந்தது.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டபிள்யூ.எச்.மூர்ச் என்ற வெள்ளையர் இந்த தியேட்டரை நிறுவினார். தனது பெயரையே மூர்ச் என சூட்டி 1916-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி ஆங்கில நாளிதழில் விளம்பரம் செய்து திறப்பு விழா நடத்தினார்.

    அதில் சென்னை மாகாணத்தில் முதலாவது குளுகுளு வசதியுடன் கூடிய தியேட்டர் என விளம்பரம் செய்யப்பட்டது. 1930-ம் ஆண்டு இதற்கு மினர்வா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆரம்ப காலம் முதல் இங்கு ஆங்கிலப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது. அப்போது சென்னையில் பெரும்பாலான தியேட்டர்களில் ஆங்கிலப்படங்கள் தான் திரையிடப்பட்டு வந்தன.

    புகழ்பெற்ற ஆங்கில பட கம்பெனியான பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் மினர்வா தியேட்டரை ஆங்கிலப் படங்களை திரையிடுவதற்கென்றே பல வருடங்கள் ஒப்பந்தம் செய்து இருந்தது. 

    ஆங்கிலம், தமிழ் தவிர மினர்வா தியேட்டரில் இந்திப் படங்களும் வெளியானது. காலப்போக்கில் மினர்வா தியேட்டரின் பெயர் மங்கியது. அதற்கு காரணம் தியேட்டர் அமைந்த இடம் போக்குவரத்து நெருக்கடி மிகுந்ததாக மாறிவிட்டது.



    10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எம்.பாட்சா என்பவர் மினர்வா தியேட்டரை விலைக்கு வாங்கி அதைப் புதுப்பித்து மாற்றி அமைத்தார். பாட்சா என்று பெயரை மாற்றி மீண்டும் சினிமா படங்களை திரையிட்டு வருகிறார். மற்ற தியேட்டர்கள் போல் இல்லாமல் இங்கு குறைந்த விலையில் ரூ.15, ரூ.12 என டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தரைத்தளத்தில் குடோனும், முதல் தளத்தில் பாட்சா தியேட்டரும் இயங்கி வருகிறது. இன்று பாட்சா தியேட்டரில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அஜித் ரசிகர்கள் பாட்சா தியேட்டர் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து படம் பார்க்க வந்து இருந்தனர். இதனால் அந்தப்பகுதி ரசிகர்களால் மீண்டும் களை கட்டத் தொடங்கியது.
    ×